இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு கொடிய போர்க்குற்றவாளி என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இயக்குநர் சீமான் கோரிக்கை விடுத்தார்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நேற்று வேலூரில் நிருபர்களிடம் கூறுகையில், "2009-ம் மே மாதம் 18-ந்தேதி இலங்கை முள்ளி வாய்க்காலில் நடந்த படுகொலை தினத்தை லண்டன், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் தேசிய துக்க தினமாக கடைப்பிடித்து வருகிறது.
வீழ்ந்ததெல்லாம், அழுவதற்காக அல்ல, எழுவதற்காகவே என்பதை வலியுறுத்தி வேலூரில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் பேரணியும், பொதுக்கூட்டமும் நடத்துகிறோம்.
பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அந்த அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது.
இலங்கை அதிபர் ராஜபக்சேயை போர்க்குற்றவாளி என அறிவிக்க வேண்டும், இலங்கைக்கு பொருளாதார தடைவிதிக்க வேண்டும் என்று முன்பு, தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.
அதையே அவர் சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிட வேண்டும். இதையே நாங்கள் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்ற உள்ளோம்," என்று கூறினார்.
No comments:
Post a Comment