இந்த கட்டுரை ஆசிரியர் திரு.என்.முருகன், அவர்கள் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி. துக்ளக்கில் தொடர்ந்து எழுதி வருபவர். இவரது நேர்மையையும் சிறப்பையும் சுட்டிக்காட்ட இது ஒன்றே போதும். இவர் கட்டுரைகள் தேச முன்னேற்றம் , தேச நலம், அதிகாரிகள் மற்றும் தலைவர்களின் நேர்மை குறித்தே சுற்றி சுற்றி வரும். மிகச்சிறந்த தேசபக்தர். பல பொறுப்புகளில் மிக நேர்மையாக பணியாற்றியவர்.மிகச்சிறந்த அனுபவசாலி.தினமலரில் பிரசுரமான இவரது கட்டுரையை வெளியிடுவதில் சகமனிதன் பெருமை கொள்கிறான்.
ஆட்சியில் உள்ள அரசு எவ்வளவு திட்டங்களைத் தீட்டினாலும், அதை செயல்படுத்தி, மக்கள் பலன் பெறுவது அதிகாரிகள் கையிலும், அவர்களின் நிர்வாகத் திறனிலும் தான் உள்ளது. ஆட்சியாளர்களுக்கும், அதிகாரி களுக்கும் இடையே இணக்கமான சூழல் தொடர்ந்தால் மட்டுமே, மாநிலத்தின் வளர்ச்சி உறுதிப்படுத்தப்படும்.
அந்த வகையில், தமிழகத்தில் அரசு திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடையும் வகையில், நிர்வாகத்தை சீர் செய்ய, புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, என்.முருகன் கூறும் ஆலோசனை:
கடந்த, 1989ல், மத்திய தொழில் துறை இணை அமைச்சராக இருந்த அருணாச்சலத்திடம், தனிச் செயலராக இருந்தேன். அப்போது, மேற்கு வங்கத்திலிருந்து வந்த, ஜி.வெங்கட்ரமணன் என்ற, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி, தொழில் துறை இணைச் செயலராக இருந்தார்.அவர் என்னிடம் கூறும் போது, "மேற்கு வங்கத்தில் புதிதாக ஏதேனும் ஒரு திட்டத்தை நடைமுறைபடுத்தும் போது, அதற்கு நிதி ஒதுக்குவது, எப்படி நடைமுறைபடுத்த வேண்டும் என்ற செயல்பாடுகளை தொகுத்து, ஒரு அரசாணை பிறப்பிக்கப்படும். அப்படி அரசாணைக்கான வரைவை எழுதும் முன், இதே பொருளில், தமிழக அரசு வெளியிட்ட ஆணையைப் பெற்று, அதில், பெயர்கள், பணம் தொடர்பான விவரங்களை மட்டும் மாற்றி வெளியிடுவோம். இதனால், தமிழக அதிகாரி என்பதையே பெருமையாக கருதுவேன்' என்றார்.
நான் டில்லியில் பணிபுரிந்த போது, இதே பாணியில் வேறு மாநில அதிகாரிகளும் கூறியுள்ளனர். இப்படி, நாட்டுக்கு வழிகாட்டியாக, முந்தைய காலங்களில் தமிழக அரசின் நிர்வாகம் இருந்தது; இப்போது, காலம் மாறிவிட்டது.சமீபத்தில் டில்லி சென்றிருந்த போது, தமிழக நிர்வாகம் குறித்து, மத்திய அரசின் உயரதிகாரிகள் பலர் மிகுந்த வியப்பும், வேதனையும் தெரிவித்தனர். "தமிழக அரசில் முதல்வரில் இருந்து, அனைத்து அமைச்சர்களும், செயலர்களும், தங்களுக்கு கீழே பணிபுரியும் செயலர்களுக்கும், தனிச் செயலர்களுக்கும் ஓய்வு அளித்து வீட்டுக்கு அனுப்பாமல், மீண்டும், மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்கி பணியமர்த்திக் கொள்கின்றனராமே... உண்மையா?' என கேட்டனர். "ஆம்... மிகப் பெரிய அதிகார துஷ்பிரயோகம்' என, பதில் கூறினேன்.
துணை கலெக்டர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவர், கடந்த ஒன்பது ஆண்டுகளாக அரசு பதவியில் தொடர்கிறார். இவர் மட்டுமல்ல, பியூன்கள், லிப்ட் ஆபரேட்டர்கள் கூட பதவி நீட்டிப்பு பெறுகின்றனர்.இதற்கெல்லாம் காரணம், அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் தாங்கள் செய்யும் ஊழல்களுக்கும், விதிமீறல்களுக்கும், துணை வருபவர்களுக்கு, பதவி நீட்டிப்பு வழங்குகின்றனர் என, பதில் சொல்லவே கூச்சமாக இருக்கிறது.அடுத்து அரசு ஊழியர்களை ஓட்டு வங்கிகளாக கருதி, அவர்கள் வேலை செய்யாவிட்டாலும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசு, முதலில் கவனிக்க வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.வேறு எந்த துறைகள் சரியாக செயல்படாவிட்டாலும் வருவாய்த்துறை, காவல்துறை, மருத்துவத்துறை, கல்வித்துறை ஒழுங்காக இருந்தாலே, மக்கள் நல்வாழ்வு பாதிக்காமல் மாநிலத்தின் முன்னேற்றம் தடையின்றி தொடரும்.மருத்துவர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும். தரமான மருந்துகளை, சரியான விலைக்கு வாங்கி நோயாளிகளுக்கு தர வேண்டும். போலீசார் தங்களுக்கு இடப்பட்ட பணிகளை, குறித்த காலத்தில் முடிக்கின்றனரா என்பதை, தலைமை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அரசுப் பள்ளி, கல்லூரிகளில், ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வந்து, பாடம் கற்பிக்க வேண்டும். இவற்றை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை, யுத்த வேகத்தில் புதிய அரசு நிறைவேற்ற வேண்டும்.
தனியார் கல்லூரிகள், தகுதி வாய்ந்த ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தி யுள்ளனவா, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றியுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற அலங்கார திட்டத்தை ரத்து செய்து, அந்த தொகையை மருத்துவமனைகளை சீர் செய்வதற்கும், விரிவாக்கம் செய்வதற்கும் பயன்படுத்த வேண்டும்.மாநில நிர்வாகத்தின் உயிர் மூச்சு, மாவட்ட கலெக்டர்களின் தலைமையிலான வருவாய் துறை. இதை வலுப்படுத்த, மாவட்ட கலெக்டர்களின் அதிகாரம் நிலை நிறுத்தப்பட வேண்டும். மாவட்ட அமைச்சர்கள் பின்னால், மாவட்ட கலெக்டர்களும், எஸ்.பி.,க்களும் செல்வதை தவிர்க்க வேண்டும். டி.ஆர்.ஓ.,க்கள், துணை கலெக்டர்கள், தாசில்தார்கள், ஆர்.ஐ.,க்கள், வி.ஏ.ஓ.,க்கள் தங்களுக்கு இடப்பட்ட வேலைகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும்.
இலவச திட்டங்களுக்கும், முதல்வர், துணை முதல்வர் பங்கேற்கும் விழாக்களுக்கும், இத்தகைய அதிகாரிகள் தங்கள் முழு நேரத்தையும் செலவழித்து, தங்கள் கடமைகளை நிறுத்தியதால், கடந்த நான்காண்டுகளாக நிர்வாகம் சீர்கெட்டுப் போனது. இதை சரிசெய்தாலே புதிய அரசு, தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பீடு நடை போட, முதல் அடியை எடுத்து வைத்ததாகும்.அரசு நிர்வாகத்தில் ஒவ்வொரு பணியை செய்வதற்கும் விதிகள் உள்ளன. அதன்படி செய்தால், தவறுகள் வராது. இதனால், வெளிப்படைத் தன்மை தேவை என்ற கோரிக்கைக்கே தேவையிருக்காது.பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை இவற்றில் ஒப்பந்தம் பெறுவதில் லஞ்சம் பல ஆண்டுகளாக தொடர்கிறது. தகுதியில்லாத ஒருவருக்கு இது போன்ற கான்ட்ராக்ட்களை விதிகளை மீறி வழங்கி, அதற்காக ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை, அதிகாரிகளே பெற்று விடுகின்றனர். இந்த ஊழலை ஒழிக்காவிட்டால் அரசு நிர்வாகம், நாட்டு நலன் சீரழிந்து விடும்.
என்.முருகன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி
Source: Dinamalar
No comments:
Post a Comment