'விடுதலை' நாளேட்டை ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றைக்கே அவசர அவசரமாக ஆணை பிறப்பித்து அரசு நூலகங்களில் இடம் பெறுவதற்குத் தடை விதித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணாவின் பெயரையும் 'திராவிட' என்ற இன அடையாளத்தையும் கொண்ட அதிமுக ஆட்சி நடத்தும் கால கட்டத்தில், திராவிட இயக்கத்தின் ஆணிவேரான- அதன் தாய் என்று சொல்லத்தக்கதான 'விடுதலை' ஏட்டைப் புறக்கணிக்கும் வகையில் ஆணை பிறப்பது வரலாற்றுக் குற்றம் ஆகாதா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
'விடுதலை' ஆசிரியரான வீரமணி விடுத்துள்ள அறிக்கையில், தமிழர்களின் 'கெசட்' என்றால் அது 'விடுதலை' என்பது சுவர் எழுத்தாகும். நம் ஆயுதம் 'விடுதலை' என்று சுருக்கமாகச் சொன்னார் அதன் உரிமையாளரான தந்தை பெரியார். தமிழன் வீடு என்பதற்கு அடையாளம் 'விடுதலை' என்றார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.
''ஒரு காலத்தில் நீ உன்னத நிலையில் இருந்தாய்; இந்நாட்டு ஆட்சி உன்னுடையதாய் இருந்தது. ஆனால், இன்று! நீ ஆண்டியாய்க் கிடக்கிறாய். வீரனாய் விறல் வேந்தனாய் இருந்த நீ கோழையாய் பூனையைக் கண்டஞ்சும் பேதையாகிக் கிடக்கிறாய். சிம்மாசனத்தில் சிறப்போடு இருந்தநீ, இன்று செங்கை ஏந்திக் சேவடி காத்து நிற்கிறாயே! இப்படி நீ ஆனதன் அடிப்படையை உணரவில்லையே! என்று கூறி விளக்கமும், விழிப்பும் உண்டாக்கி வருகின்றது ‘விடுதலை’.''
''இவ்வாறு செய்வது மாபெரும் குற்றம் என்று மக்கள் சார்பில் அரசியலை நடத்தும் சர்க்கார் கூறுகின்றது. ஜாமீன் கேட்கின்றது. இது நேர்மையா?'' (திராவிட நாடு 27.6.1948) என்று 'விடுதலை' சார்பில் நின்று விவேகக் குண்டுகளை வீசினார் அண்ணா.
தந்தை பெரியார் அவர்களின் அறிக்கைகளும், தலையங்கங்களும், பெட்டிச் செய்திகளும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் மட்டுமல்ல; நாடாளுமன்றத்திலும்கூட பெரும் புயல்களைக் கிளம்பியதுண்டு.
1939ம் ஆண்டிலேயே ஈழத் தமிழரைப் பற்றி எழுதியது 'விடுதலை'; இந்தி எதிர்ப்புப் போரில் இணையற்ற தளபதியாகக் களத்தில் நின்று வெற்றி வாகைசூடிய விவேக சிந்தாமணி விடுதலை.
குலக்கல்வித் திட்டத்தை ஓட ஓட விரட்டியடித்து, ஆச்சாரியாரை ஆட்சியை விட்டு அகலச் செய்து, கர்ம வீரர் கல்வி வள்ளல் காமராசரை அரியாசனத்தில் அமர வைத்ததில் 'விடுதலை'யின் பங்கு என்ன என்பதை வரலாறு வாழ்நாள் எல்லாம் பேசிக் கொண்டே இருக்கும்.
சமூக நீதிக்களத்தில் அதன் பங்களிப்பு சாதாரணமானதா? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வருவதற்காக முழு மூச்சாகப் பாடுபட்ட பேராயுதம் எது? 'விடுதலை' தானே? 31 (சி) சட்டத்துக்குக் கருத்துரு கொடுத்தது 'விடுதலை'யே!.
ஏன்? இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் 31(சி) சட்டத்தினைக் கொண்டு வந்து 69 சதவீகிதம் இடஒதுக்கீட்டைக் காப்பாற்றியதற்கு கருத்துரு கொடுத்ததும் 'விடுதலை'யன்றோ!
ஆட்சிகள் போகலாம்- வரலாம்; அதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நடந்து கொள்ளத் தேவையில்லை.
மே 16ம் தேதி, முதல் அமைச்சராக செல்வி ஜெயலலிதா பதவி ஏற்கிறார் என்றால் அவசர அவசரமாக அன்றைய தினமே அரசு நூலகங்களில் 'விடுதலை' ஏட்டை நிறுத்தும் ஆணை பிறப்பிக்கப்படுகிறது என்றால் இதன் பொருள் என்ன?
2012 மார்ச் வரை அரசு நூலகங்களில் 'விடுதலை' இடம் பெறுவதற்கான அரசு ஆணை ஏற்கெனவே இருக்கும் நிலையில், திடீரென்று அந்த ஆணையை ரத்து செய்ய வேண்டிய அவசியம்- அவசரம் ஏன்?, ஏன்?.
மாறுபட்ட கருத்துகள்- விளக்கங்கள் கூடவே கூடாது என்று நினைப்பது ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு உகந்ததுதானா?. ‘விடுதலை’யைப் பொறுத்தவரையில் ஆதரிக்க வேண்டியதை ஆதரித்தும், எதிர்க்க வேண்டியதை எதிர்த்தும் நடைபோடும் பகுத்தறிவு ஏடு.
பகுத்தறிவு கொள்கையோடு உலகிலேயே வீரநடை போடும் ஒரே ஏடு 'விடுதலை'யே!. இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் 51(ஏ)வில் கண்டுள்ள விஞ்ஞானம், சீர்திருத்த மனப்பான்மையை அன்றாடம் வளர்க்கும் ஒரே ஏடும் விடுதலையே! இதற்காக திராவிட இயக்கங்கள் பெருமைப்பட வேண்டாமா?.
அரசு என்பது அனைத்து மக்களுக்கும் கருத்துரிமை என்ற அடிப்படைக் கோட்பாடு கொண்டதல்லவா!.
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், நான் எப்பொழுதும் செயல்படுவதில்லை என்று கூறும் முதலமைச்சர் திடீரென்று 'விடுதலை'யை நிறுத்தியது எந்த அடிப்படையில்? அல்லது அவர் அறியாமல் 'அதி விசுவாசிகளான' அதிகாரிகளின் வேலையா இது?
பெண்கள் உரிமைக்காக வாழ்நாள் எல்லாம் குரல் கொடுப்பதை குருதியோட்டமாகக் கொண்ட 'விடுதலை' ஏடு பெண் ஒருவர் முதல்வராக இருந்த ஒரு கால கட்டத்தில் அரசு நூலகங்களுக்குச் செல்லாமல் நிறுத்தப்பட்டது என்ற பழியைச் சுமக்கலாமா?
அதிமுக அரசின் இந்தச் செயல்பாடு- காலா காலத்துக்கும் குற்றச் செயல் என்று பேசப்படாதா?
எப்படிப்பட்ட 'விடுதலை?' தந்தை பெரியார் அவர்களின் போராயுதம் மட்டுமல்ல, அறிஞர் அண்ணா, டி.ஏ.வி.நாதன், பண்டித எ.முத்துசாமிப்பிள்ளை, அ.பொன்னம்பலனார், சாமி சிதம்பரனார், குத்தூசி குருசாமி, அன்னை மணியம்மையார் போன்றவர்களை ஆசிரியர்களாகக் கொண்ட அரும் பெரும் வரலாற்றுப் பெருமைக்குரிய ஏடாயிற்றே!
அண்ணாவின் பெயரையும் 'திராவிட' என்ற இன அடையாளத்தையும் கொண்ட ஒரு கட்சி ஆட்சி நடத்தும் ஒரு கால கட்டத்தில், திராவிட இயக்கத்தின் ஆணிவேரான- அதன் தாய் என்று சொல்லத்தக்கதான 'விடுதலை' ஏட்டைப் புறக்கணிக்கும் வகையில் ஆணை பிறப்பது வரலாற்றுக் குற்றம் ஆகாதா?
புதிய புதிய சட்டங்கள் உருவானதற்கும், தமிழர்களைப் பாதிக்கச் செய்யும் சட்டங்கள் பின் வாங்கப்படுவதற்கும், புதிய புதிய திட்டங்கள் கருக் கொள்வதற்கும், பிற்போக்குத்தனமான திட்டங்கள் குதிகால் பிடரியில் இடிபட ஓட்டம் பிடிப்பதற்கும் காரணமாக இருந்தது ‘விடுதலை’ அல்லவா! ‘விடுதலை’ வெறும் காகிதமல்ல- தமிழர்களைப் பழைய நிலையிலிருந்து விடுதலை செய்த வீரவாள்!- போர் வாள்!!
கடலூர், மதுரை சிறைகளில் 'விடுதலை'க்குத் தடை போடப்பட்டது- சிறை அதிகாரிகளால்; அந்த நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 'ரிட்' மனு ஒன்றைத் தாக்கல் செய்தோம். உள்துறை தனிச் செயலாளர் அந்தத் தடை ஆணையை விலக்கிக் கொண்டதால் (27.11.1987) வழக்கு விசாரணை தேவையில்லை என்று நீதியரசர் சத்யதேவ் தீர்ப்பு அளித்தது உண்டே!.
1935ல் தொடங்கப்பட்டு, பவள விழாவும் கண்ட திராவிட இயக்க மூச்சுக் காற்றான 'விடுதலை' ஏட்டை நூலகங்களில் நீக்கிய பழியை முதலமைச்சர் ஏற்க வேண்டாம் என்பது நமது வேண்டுகோள்.
நெருக்கடி நிலை என்னும் நெருப்பாற்றை எல்லாம் நீந்திக் கரை சேர்ந்த வரலாறு 'விடுதலை'க்கு உண்டு; இப்பொழுது நடப்பது நெருக்கடி நிலை ஆட்சியல்லவே!
முதலமைச்சர் பரிசீலிக்கட்டும்!
முதலமைச்சர் அவர்கள் நிதானமாகக் கருத்து செலுத்தி, நல்லது நடக்க ஆவன செய்வார் என்று எதிர்பார்க்கிறோம்.
கழகத் தோழர்களே, தமிழ் இன உணர்வாளர்களே விடுதலை சந்தாக்களைக் குவியுங்கள்!, பணிகளை உடனே துவக்குங்கள்!!.
இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.
பஞ்ச் பாலா:
என்னது இந்த ஆட்சில இந்த மாதிரி நல்ல விஷயங்கள் எல்லாம் நடக்கின்றனவா? இது இப்போது விடுதலை இணையதளத்தில் இருந்து எடுத்த படம். பாருங்கள்.
ஐயா வீர(?)மணியாரே நீங்க மணி அடிக்க வேண்டியதுதான் அதுக்காக நாங்க எல்லாரும் உங்கள் மாதிரியே அடிக்கணுமான்னு மக்கள் கேட்குராங்க. மேலுள்ள படத்தினை பாருங்கள் அதிலுள்ள விஷயங்கள் ஏதாவது நமக்கு உபயோகமானதாக உள்ளதா? விடுதலையிலிருந்து விடுதலை அளித்த ஜெயலலிதாவுக்கு நன்றி.
No comments:
Post a Comment