தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது. ஏராளமான மாணவர்கள் மையங்களுக்கு நேரில் வந்து விண்ணப்பங்கள் வாங்கிச் சென்றனர்.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் விண்ணப்பங்கள்
தமிழ்நாட்டில் மொத்தம் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. இவற்றில் ஆயிரத்து 653 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கிறது. இது தவிர சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 635 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.
சென்னையில் உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் தற்போதுள்ள தலா 150 இடங்களை 250-க உயர்த்துமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு கூடுதலாக 200 இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு பல் மருத்துவக் கல்லூரி சென்னையில் மட்டுமே உள்ளது. இங்கு 85 இடங்கள் உள்ளன. மேலும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 891 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் வினியோகிக்கப்படுகிறது. 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் வந்து விண்ணப்பங்கள் வாங்கிச் சென்றனர்.
புதிதாக 120 பொறியியல் கல்லூரிகள்:
பி.இ. , பி.டெக். படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று அதிகாலையிலேயே துவங்கியது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்ப வினியோகத்தை துணை வேந்தர் மன்னர் ஜவகர் தொடங்கி வைத்தார்.
இது குறித்து மன்னர் ஜவகர் நிருபர்களிடம் கூறியதாவது,
வரும் கல்வியாண்டிற்கான பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் 62 இடங்களில் வழங்கப்படுகிறது. இதில் சென்னையில் மட்டும் 5 இடங்களில் விண்ணப்ப வினியோகம் நடக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 488 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதி்ல் 460 சுயநிதி கல்லூரிகளும் அடக்கம். இதன் மூலம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 20 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கிடைக்கின்றன.
கடந்த ஆண்டு கலந்தாய்வு முடிந்த பிறகு 8 ஆயிரத்து 172 இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு 400 பொறியியல் கல்லூரிகள் தங்கள் பாடப்பிரிவுகளை அதிகரிக்கக் கோரி மனு அளித்துள்ளனர். இதனால் ஏற்கனவே உள்ள க்லலூரிகளிலேயே 30 ஆயிரம் கூடுதல் இடங்கள் கிடைக்கும். மேலும், இந்த ஆண்டில் 120 புதிய கல்லூரிகள் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன. இதனால் கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கடந்த ஆண்டு 472 பொறியியல் கல்லூரிகள் இருந்தன. இந்த ஆண்டு புதிதாக 16 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 78 ஆயிரம் முதல் தலைமுறை மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் உயரும். அண்ணா பல்கலைக்கழகத்தில் 20 கவுண்டர்களில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது என்றார்.
ஒரே நாளில் 88 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை
இந்நிலையில் நேற்று வினியோகம் துவங்கிய முதல் நாளே தமிழகம் முழுவதும் 88 ஆயிரத்து 744 பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் விற்றுள்ளன. இதில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் 13 ஆயிரத்து 300 விற்றுள்ளது. கடந்த ஆண்டு முதல் நாளில் 63 ஆயிரத்து 800 விண்ணப்பங்கள் தான் விற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment