‘க்ஷயம்’ என்றால் தேய்ந்து போதல் அல்லது குறைந்து போதல் என்று அர்த்தம். ‘அக்ஷயம்’ என்றால் அழிவின்றி வளர்வது, பூரணமானது, குறையாதது, அழியாத பலன் தரும் என்று பொருள்.
சித்திரை மாதம் அமாவாஸையை அடுத்துவரும் மூன்றாம் பிறை நாளான த்ரிதியை தினத்தில்தான்,கிருதயுகத்தை பிரமன் படைத்ததாகச் சொல்லுகிறது பவிஷ்ய புராணம். ஒரு யுகம் முடிந்து மறுயுகம் தொடங்கும் நாளை ‘யுகாதி’ என்பர். அந்த வகையில் அக்ஷ்ய த்ரிதியை தினமும் காதிதான். ‘மாலோடு’ ‘திரு’ சேர்ந்து, மஹாவிஷ்ணு ‘திருமால்’ ஆன தினம் என்பதால், திரிதியை திதி, பொதுவாகவே லக்ஷ்மி கடாட்சம் நிறைந்தது. எனவேதான் அன்று பொன்னும் பொருளும் வாங்கி சேர்த்தால் எந்தவிதக் குறையுமின்றி அந்த ஆண்டு முழுவதும் இல்லத்தில் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். அட்சய த்ரிதியையன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையில் கோலமிடுங்கள். மகாலக்ஷ்மி, மஹாவிஷ்ணு இருவரும் சேர்ந்தபடம் இருப்பின், விளக்கேற்றி பக்தியோடு பூஜை செய்து, தூப, தீபம் காட்டி, காய்ச்சிய பால், பழம் நிவேதனம் செய்து திருமாலை வழிபடுங்கள்.
இல்லத்தில் செய்யும் பூஜைத்தவிர அன்றையதினத்தில், நாம் வழங்கும் தானத்தால் புண்ணிய பலன்களை வளரச் செய்யலாம் என்கிறது புராணம். அதோடு, அன்றைய தினம் பித்ருக்களுக்காக தர்ப்பணம் அளித்தால் முன்னோர்களின் ஆசியைப் பெற்று, வறுமை நீங்கி வளம் பெறலாம். ஆயினும், பொன்னும் மணியும் வாங்கிக்குவிக்கக் குறியாயிராமல், த்ரிதியை நன்நாளில் நம்மிடம் இருப்பதிலிருந்து சிறிதேனும் வறியோர்க்கு தானமளித்தாலே லக்ஷ்மி நாராயணின் ஆசியையும் அவரது பரிபூரண அருளையும் அட்சயமாய் பெறலாம் என்பதில் ஐயமேதுமில்லை!
மகத்துவம் மிகுந்த அக்ஷ்ய த்ரிதியை நாளில் எந்த ஒரு செயலைத் துவங்கினாலும் பொன்னும்,வெள்ளியும், பொருளும் வாங்கினாலும் அவை மேன்மேலும் வளர்ந்து வளமை தரும் என்பது தொன்று தொட்டு நம்மிடையே இருந்து வரும் நம்பிக்கை. இந்த நம்பிக்கை வளர காரணமாயிருப்பது பல புராணங்களில் நிகழ்ந்துள்ள சம்பவங்களும், ஆச்சரியமூட்டும் நிகழ்வுகளும்தான். அவற்றில் சில……….
1. திருமகளின் எட்டு அவதாரங்களுள் ஐஸ்வர்ய லக்ஷ்மி மற்றும் தான்ய லக்ஷ்மி தோன்றியது இந்தத் திருநாளில்தான்.
2. இந்த புண்ணிய நாளில் தான் தசாவதாரங்களுள் ஒன்றான பரசுராம அவதாரம் நிகழ்ந்தது.
3. மஹோதயம் எனும் நகரில், வணிகன் ஒருவன் அட்சய த்ரிதியை தினத்தின் மகிமையைக் கேள்வியுற்று, அந்நாளில் கங்கையில் நீராடிவிட்டு, பித்ருத் தர்ப்பணம் செய்வதுடன், கோதானம், சுவர்ணதானம், பூமிதானம் போன்றவற்றைச் செய்து, மறுபிறவியில் ‘குசாவதி’ நாட்டின் அரசனானதும் த்ரிதியை தினத்தின் மகத்துவத்தை உணர்த்தும் ஒருகதைதான். எனவே இந்த தினத்தில் விசிறி, குடை, சுவர்ணம் ஆகியவற்றை தானம் செய்வது அழியாப்பலனைத்தரும் என்பது விசேஷம்.
4. மஹாபாரதக்கதையில், கெளரவர் சபையிலே கெளரவம் பறிபோய் அவமானம் நேர்ந்துவிட்ட அச்சத்தில், அவலக்குரலில்அபயம்! அபயம்! என்று அலறினாள் திரெளபதி இருந்த இடத்திலிருந்தே ‘அக்ஷ்யம்’ என்றார் கண்ணன். குறையாமல்வளர்ந்தது திரெளபதியின் சேலை.காக்கப்பட்டது பாஞ்சாலின் கற்பு, இது நிகழ்ந்ததும் ஒரு த்ரிதியை தினத்தில்தான்.
5. பாற்கடல் கடையப்பட்டபோது, அமுதத்தோடு அவதரித்த மலைமகள், ‘அகலுமில்லேன்’ என்று மாலவன் மார்பில் நிலையான இடம் பிடித்தது த்ரிதியை திதி நாளில்தான்.
6. மஹாலக்ஷ்மியின் பார்வை பட்டதால் பிறை நிலவாகப் பிறந்த சந்திரன், அட்சயமாகப் பெருகி வளர்ந்த முழுமதியாகப்பிரகாசித்தவன் ஒருசமயம், மதிகெட்ட செயலால், சாபம் பெற்று (க்ஷயரோகம்) அவன் உடல் தேய்ந்தபோது, அபயம் என்று இறைவனைத் தஞ்சமடைந்து, சாப விமோசனமாக அக்ஷயவரம் பெற்றதும் இந்த த்ரிதியை தினத்தன்றுதான்.
7. ஈஸ்வரன் பிட்சாடனர் திருக்கோலத்தில் வந்து காசியில் அன்னபூரணியான அம்பிகையிடம் பிட்சை பெற்ற பின்தங்கத்திலான அட்சய பாத்திரத்திலிருந்து ஸ்வர்ணகரண்டியால் உணவை கொடுத்து, அகிலாண்டநாயகி உலகுக்கு அன்னம் வழங்கத் தொடங்கியதும் இத்திருநாளில்தான்.
8. சகோதரன் ராவணனால் விரட்டப்பட்டு, வறுமையில் வாடிய குபேரன், ஈடற்ற தவத்தால், ஈஸ்வரனின் ஆக்ஞைப்படி, திருமகளை வழிபட்டு சங்கநிதி, பதுமநிதி என்ற ஐஸ்வர்ய கலசங்களைப் பெற்ற நாளும் அட்சய த்ரிதியை நாளன்றுதான்.
9. வனவாசத்தின்போது கடும் தவம் செய்த தர்மரின் முன்னால் காட்சி தந்த சூரியபகவான், ‘அன்னவளம் குன்றாத’ அட்சயப்பாத்திரத்தை அவருக்கு அளித்ததும் இந்த நாளில்தான்.
10. ஏழ்மை என்பதற்கே எடுத்துக்காட்டாக இருந்த குசேலர், கண்ணன் கூறிய ‘அக்ஷ்யம்’ என்ற சொல்லால் குபேரவாழ்வு பெற்றதும் த்ரிதியை தினம் ஒன்றில்தான்.
11. தமிழ் வருடங்களான அறுபது வருடங்கள். ‘பிரபவ’ எனத் தொடங்கி, ‘அக்ஷய’ என்று நிறைவடையும். ‘அக்ஷய’ வில் முடியக்காரணம் காலத்திற்கு முடிவில்லை; அக்ஷயமாய் அவை வளர்ந்து அடுத்த சுழற்சி ஆரம்பமாகும் என்று உணர்ததவே தான்.
Source: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்
1 comment:
அருமையான அட்சய திருதியை பற்றிய தகவல்களுக்குப் பாராட்டுக்கள்.
Post a Comment