நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Monday, April 18, 2011

தோல்விக்கு பின்-கலைஞரின் கண்ணீர் கடிதம்!


    கொடி தோரணம் இல்லை. ஆரவாரம், பேரணி இல்லை. பொது கூட்டம், கல்வீச்சு, அடிதடி எதுவுமே இல்லை தமிழக தெருக்களின் வீட்டு சுவர்கள் சுத்தமாக இருக்கிறது. எருமை மாடு உரசுவதற்கும், பசுமாடு திண்பதற்கும் போஸ்டர்கள் கிடையாது. ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம் தேர்தல் முடிந்து விட்டதாம். நடந்ததும்  தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை. ஒரு நீர்குமிழி விரிந்து பட்டென்று வெடிப்பது போல் எல்லாமே ஒய்ந்து விட்டது.

    பழையகால தேர்தல் என்றால் எத்தனை ஊர்வலங்களை பார்க்கலாம். உங்கள் வீட்டு பிள்ளை, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவார், ஏழைகளின்  சின்னம் என்றெல்லாம் எத்தனை ஒலிபெருக்கிகள் அலறி காதை கிழிக்கும். தெருவிளக்கில் மின்சாரம் திருடி கட் அவுட்டுகளை அலங்கரிப்பதாகட்டும், திண்ணை தூங்கிகளுக்கு சாராயம் வாங்கி கொடுத்து அலற வைப்பதாகட்டும், ‘டீ’ கடை பெஞ்சில் கால்மேல் கால் போட்டு அரசியல் கச்சேரி நடத்துவதாகட்டும், வீடு வீடாக தேடி வந்து காலில் விழுகிறேன் பேர்வழி என முரட்டு கையால் பாதங்களை சுரண்டுவதாகட்டும,; அதில் ஒரு அலாதியான போதை இருக்கத்தான் செய்தது, ஒரு மக்கள் அரசு என்பது மக்களுக்கு கொடுக்கும் அதிகபட்ச சந்தோசம் இது மட்டும் தான் என்றிருந்த நிலைமாறி அதுவும் இல்லாமல் போய்விட்டது.

    அரசாங்கமும் தேர்தல் கமிஷனும் மக்கள் சந்தோஷத்தை தின்று ஏப்பம் விட்டு விட்டதென்றால் நாமும் அப்படி செய்ய முடியுமா? தேர்தலை முடித்தோம்  ஓட்டுகளை எண்ணி பட்டாசு வெடித்து கொண்டாடியோ தலையில் துண்டு போட்டு ஒப்பாரி வைத்துவிட்டு அடுத்த வேலையை பார்ப்போம் என்றோ கூட போக முடியவில்லை. ஒரு நாள் கூத்தின் விடையை பார்க்க ஒரு மாதம் காத்திருக்க வேண்டுமாம். அது வரையிலும் தேர்தலில் நின்றவர்கள் குளிர் ஜுரத்தில் கிடந்து துடிப்பது ஒரு புறம் இருக்கட்டும். நமது திருவாளர் பொதுஜனம் யார் ஜெயிப்பர்? யார் ஆட்சி அமைப்பார்? எந்த கூட்டணி யார் பக்கம் அணி மாறும்? என்ற எதிர்பார்ப்பில் நெஞ்சி படபடக்க காத்திருப்பது தான் மகா பரிதாபம். எனவே நமது திருவாளர் பொதுஜனத்தின் ஆவலுக்கு தீனி போட தேர்தல் முடிவுகளுக்கு பின்னால் யார் தோற்றால் என்ன பேசுவார்கள் என்பதை சிறிது கற்பனை செய்து பார்ப்போம்.

     கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு தோல்வி என்பது புதிய விஷயமல்ல அவர் பல முறை தோற்று இருக்கிறார் எனவே இந்த முறை தோற்று விட்டால் கழக உடன் பிறப்புகளுக்கு எப்படி கடிதம் எழுதுவார்? அவரின் துள்ளிவரும் தமிழ் நமக்கு வராது என்றாலும் முயற்சி செய்து தான் பார்ப்போமே!

உடன் பிறப்பே!


  வான்புகழ் கொண்ட வள்ளுவனையும செம்மொழியில் சிலப்பதிகாரம் சமைத்த இளங்கோவையும் தந்த தாய் தமிழ்நாடு இன்று கண்டிருக்கும் அலங்கோலத்தை பார்த்தாயா? உடல் எங்கும் பாய்ந்தோடி கொண்டிருக்கும் பச்சை ரத்தம் நெஞ்சத்தை மட்டும் கிழித்து குபுகுபுவென பாய்வது போல, நீ துடித்திருப்பாய் அன்னை தமிழ்நாடு அமாவாசை இருளில் முழ்க போகிறதே என்று கலங்கி கண்ணீர் வடித்திருப்பாய்.

    தம்பி உன் மூத்த சகோதரனான நான் இளமை பிராயத்தை கடந்து முதுமையை தொட்டுவிட்டாலும், பாழ்பட்டு கிடக்கும் தாய் தமிழகத்தை வாழ வைத்து பார்க்கும் வற்றாத ஆசையில் சுற்றாத இடமில்லை. சூழன்று அடிக்கும் சூறாவளி போல என் தாய் நிலமெல்லாம் தம்பி உன் மலர்ந்த முகத்தை காண ஓடோடி வந்தேன். பல தாய் வயிற்றில் நாம் பிறந்தாலும் ஒரு தாய் மக்களென உன்னை நானும், என்னை நீயும் கண்ணார கண்டு நெஞ்சார தழுவி கொண்டோம். அந்த தழுவிலுள்ள பாசம் பணத்தால் வந்ததல்ல தமிழன் என்று இனத்தால் வந்தது என்று யாருக்கு தெரியும்?


    இந்த அண்ணனும் தம்பியும் சேர்ந்து விட்டால் அடிமையாக கிடக்கும் தமிழன் அடலேறு என சீறி எழுந்து விடுவான். தன்னை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆரிய மாயையின் நெஞ்சை பிளந்து விடுவான் என அஞ்சி நடுங்கிய தர்ப்பைபுல் கூட்டத்தார் சதி பேசினார்கள் தங்களுக்குள் உடைந்து கிடந்த பிணக்குகளை தற்காலிகமாக சமன் செய்து வானை மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட நாம் பள்ளத்தில் வீழ்வதற்கு குழி வெட்டினார்கள்.

    கிரேக்க வீதிகளில் சுற்றி திரிந்த ஒரு கிழவன் வருவோர் போவோரை எல்லாம் வாயார வரவேற்று உன்னையே நீ அறிவாய் என தத்துவம் பேசினானாம் அதே போல உடன்பிறப்பே உன்னையும் நீ அறிவாய், என்னையும் நீ மட்டுமே அறிவாய். கூழுக்கும், ஆடைக்கும் பாடிய பழந்தமிழ் புலவன் போல தமிழர் நலத்தை மட்டுமே அல்லும் பகலும் எண்ணி வாழ்ந்து வரும் என்னை குபேரபுரி சீமான் என்றும், கோட்டை கொத்தளத்தின் வாழும் கோடிஸ்வரன் என்றும் வசைமாரி பொழிந்தார்கள்.  தமிழருக்காக உழைத்தவன் என்ற ஒரே பாவத்திற்காக வஞ்சகமே அறியாத என் பிஞ்சு வாரிசுகளை புழுதிவாரி தூற்றினார்கள். சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதரை போல் அத்தனை சாட்டை அடியையும் நானே வாங்கி கொண்டேன் நானே தாங்கி கொண்டேன்.



     எதற்காக அண்ணா உனக்கிந்த துயரம்? யாருக்காக அண்ணா நீ தாங்க வேண்டும் பாரம் என்று நீ கேட்பது உடன்பிறப்பே என் காதில் விழுகிறது தொல்காப்பிய சிறப்புகளை, குன்றென உயர்ந்து நிற்கும் குறழோவியத்தின் பேரெழிலை, நம் இனத்தாரின், வீர மரபை பறைசாற்றும் புறநானுற்று மாண்புகளை காதலனுக்கு கனிவாய் முத்தம் சிந்த காத்திருக்கும் காதல் பெண்களின் உள்ளத்து உணர்வுகளை வரிவரியாய் வர்ணிக்கும் அகநானூற்று சுவை உணர்வை காலமெல்லாம் எண்ணி எண்ணி ஏகாந்த வாழ்க்கை வாழ உடன்பிறப்பே எனக்கும் ஆசை தான் ஆனால் என் செய்வது?

        என் முன்னால் இமய வரம்பில் புலிக்கொடி நாட்டிய தமிழன், வடதிசை மன்னனை கல் சுமைக்க வைத்த தமிழன், முறத்தால் புலி விரட்டிய வீர மங்கைக்கு மகனாக பிறந்த தமிழன், கஞ்சிக்கும் வழியின்றி கட்டுவதற்கும் துணியின்றி ஏன் என்று கேட்பதற்கு நாதியின்றி பாழ்பட்டு கிடக்கிறானே?

        சிங்கார சீமான்கள், செவ்வாழை தோட்டத்தில் சீட்டாட்டமாடி களிந்திருக்க பாலில் கை கழுவினால் தான் உடல் வனப்பு குறையாதென குபேரபுரி மாந்தர் குதுகலம் கொண்டிருக்க வேளைக்கு ஒரு செருப்பும், மணிக்கு ஒரு ஆபரணமும், குளிக்கும் அறைகூட பொண்ணை உருக்கி மெழுகி வைத்த அம்மணிக்கு பெறாத பிள்ளைக்கு அரசு குமார்களின் திருமணம் போல் வாராணமாயிரம் சூழு மண ஊர்வலம் நடத்தி மகிழ்ச்சியில் கொக்கரிக்க.


     பெற்ற பெண்களை உயிரோடு  தர்மபுரியில் சிதை மூட்ட, ஜனநாயகத்தின் நான்காவது தூணாண பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட நீதி தேவதையின் செல்ல பிள்ளைகளான வழக்கறிஞர்கள் ஓடஓட விரட்டபட ஒரே நாள் இரவில் கள்வர்களைபோல அரசங்க ஊழியர்கள் சிறையில் அடைக்கப்பட இத்தனையும் தட்டி கேட்ட ஒரே குற்றத்திற்காக நானும் என் மருமகனும் நள்ளிரவில் பந்தாடப்பட திக்கெற்று கிடக்கிறானே திராவிடன் அவனை மீட்டு எடுக்க ஆவது செய்வோம் என்று செயல்படாமல் இருப்பதற்கு உன் அண்ணனின் இதயம் இரும்பால் செய்யப் பட்டது அல்ல உடன்பிறப்பே பஞ்சைவிட மென்மையானது உன் அண்ணனின் இதயம் .

    எனவே தான் வயதை மறந்தேன் உடலை அழுத்தும் ஆயிரம் நோயை மறந்தேன், தெற்கு தமிழன் வடக்கேயும் ஆள வேண்டும் என்று இரவோடு இரவாக ஆகாய விமானத்தில் பறந்தேன்.

செந்தமிழ் நாட்டு தமிழச்சி ஒருத்தி செங்குருதிப் பாயும் செறுக்களத்தில் ஊனையும் உதிரத்தையும் உயிரையும் கொடுத்து ஈன்ற தந்தையை இழந்தாளாம் அறுமை அண்ணனையும் பாசத்தப்பியையும் பறிகொடுத்தாளாம்



  இத்தனையும் இழந்தது போதாதென்று மங்கலநாண் தந்த மனாளனையும் மரண பூமிக்கு அனுப்பினாளாம் அத்தோடு விட்டாளா அந்ந ஆரணங்கு?

 எல்லையில் பகைவந்து யாரங்கே என கூக்குரலிட்டால் கொல்லையில் அத்தி மரமா நான் அசையாமல் நிற்பதற்கு? என்றெண்ணிய அத்தமிழச்சி நெஞ்சில் முட்டிய தீந்தமிழ்பால் கொடுத்து வளர்த்த பிஞ்சு மகனையும் வீர வாள் கொடுத்து போய்வா மகனே புல்லர் கூட்டத்தை பொடியாக்கு என போர்க்களம் நோக்கி திலகமிட்டு அனுப்பினாளாம்

நானும் அவளைப் போல மதுரைக்கு அடுத்துள்ள வறண்ட பூமியையெல்லாம் வளங்கொழிக்க செய்து வரும் அஞ்சா நெஞ்சன அழகிரிக்கு டெல்லிக்கு தன்மான தமிழனின் பெருமையை பறைசாற்றி விட்டு வா என வழி அனுப்பி வைத்தேன்.

மென்மை தமிழ் எடுத்து மேடையெல்லாம் முழுங்கி வந்த என் இலக்கிய வாரிசு கனிமொழியை வடக்கிலும் சென்று போர் பரணி பாடிவா என அனுப்பி வைத்தேன்.



  வீர தமிழனின் கைப்பிடித்த பெண் அடுப்படியில் மட்டும் கிடக்கமாட்டாள் அரசியலின் இன்னார்தான் அமைச்சராக வர வேண்மென அடையாளம் காட்டுவாள் என்று ஊரெல்லாம் அறிந்து கொள்ள என் இல்லற துணைவியை நீரா ராடியாவோடு பேச வைத்தேன்.

    என் அத்தனை செயலிலும் தமிழன் உயர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் தமிழ் வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதை அறியாத ஆரிய கும்பல் என் மீது சேற்றை வாரி மட்டுமல்ல, தம்பி கொதிக்கும் தாரையும் எடுத்து பூசி விட்டார்கள்.

    நமது தமிழனுக்கு தங்கத்துக்கும் பித்தளைக்கும் வித்தியாசம் தெரியாது, கருங்கல்லுக்கும் வைரத்திற்கும் வேற்றுமை புரியாது ரத்தம் குடிக்கும் அரக்கர் கூட்டம் வந்து தொட்டிலாட்டி தாலாட்டு பாடினால் சுகமாக தூங்குவானே தவிர தன் உயிர் போய்விடுமே என கிஞ்சித்தும் கருதமாட்டான் அச்சத்திற்கும், அசட்டைக்கும் வித்தியாசம் தெரியாத அசடன் அவன் வர்ணஜால வார்த்தைகளை கொட்டி வாஞ்சையோடு பேசினாலே வாலாட்டி கொண்டு போகும் பிராணி அவன் தன்னை கழுத்தறுக்கும் கூட்டத்தையே ரட்சகர்கள் என நினைக்கும் அடிமை புத்தி அவன் ரத்தத்தில் ஓடுகிறது. அதனால் தான் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் வாழ்நாள் முழுவதும் போராடி சோற்றால் அடித்த பிண்டத்தை சொல்லால், செயலால் ஆரியத்திடமிருந்து காப்பாற்ற முடியாது என கண்ணீரோடு சொன்னார்கள்.


     உண்ண அரிசி கொடுத்தோம், கறிகாய் வாங்க வேலை கொடுத்தோம், ஓய்வு பொழுதில் அறிவை வளர்க்க வண்ண தொலைக்காட்சி கொடுத்தோம் மானம் மறைக்க ஆடை, மழைக்கு ஒதுங்க கல்வீடு, உழைத்து  பிழைக்க இலவச நிலம் என்று ஏராள நலத்திட்டங்களை செய்து முடித்தோம் அத்தனையும் பெற்று கொண்ட மறத்தமிழன் நன்றி மறந்து மானம், இழந்து மதியும் இழந்து நமக்கு தர வேண்டிய அறுச்சுவை உணவில் சாணத்தை கலந்து விட்டான். மன்னிப்போம் தமிழனை காத்திருப்போம் காலம் வரும்.

இப்படிக்கு மு.க      


     தோற்று போனால் கலைஞரின் கடிதம் ஏறக்குறைய இப்படிதான் இருக்கும். ஒரு வேளை ஜெயலிலதா தோற்று போனால்? அவர் என்ன செய்வார்? கடிதம் எழுதுவாரா? கண்ணீர் சிந்துவாரா? இரண்டுமே இல்லை பெங்களுருக்கோ கொடநாடு எஸ்டேட்டிற்கோ சென்று ஒளிந்து கொள்வார் பிறகு நமக்கெப்படி சுவாரஸ்யமான கற்பனை வரும்? உண்மையில் அ.தி.மு.க அடலேறுகள் பாவப்பட்ட ஜென்மங்கள் அவர்கள் தலைவியால் அவர்களுக்கும் சுகமில்லை மக்களுக்கும் சுவாரஸ்யமில்லை.


Source: Ujiladevi 

No comments: