ஒரு தாயின் கண்ணீர்!
==================
இரத்தப்புற்றுநோயால் பீடிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 15 வயது சிறுவன் நீரஜ் பற்றி, “சிறுவனின் உயிரைக் காப்போம்” என்ற தலைப்பில் சென்ற மாதம் இக் குழுமத்திலும் பிற குழுமங்களிலும் ஓர் பதிவு வெளியிட்டிருந்தேன்.
அவன் விரைவில் நலம்பெற வேண்டி நாம் அனைவரும் பிரார்த்தனைகள் செய்த போதிலும், இறைவனின் முடிவு வேறொன்றாய் இருந்திருக்கிறது. சிறுவனின் இரத்த ஓட்டத்தால் புற்றுநோய்க்கிருமிகள் அவனது மூளையைப் பாதித்து, கை, கால்கள் செயலிழந்த நிலையில் சில நாட்கள் இருந்து, சென்ற 3.7.2011 மாலை சென்னை அரசு பொதுமருத்துவமனையில் உயிரிழந்தான். அவனது மரணச்செய்தி எங்கள் ‘அலைபேசி குறுஞ்செய்தி (Mobile SMS) கவிஞர்கள் குழும’ நண்பர்களால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங் களிலுள்ள அனைத்து நண்பர் களுக்கும் தெரியப்படுத்தப்பட்டு, கண்ணீர் அஞ்சலி கவிதைகளும், அவனது தாய் திருமதி சுமதி அவர்களுக்கு அனுதாபச்செய்திகளும் வந்து குவிந்தவண்ணம் இருந்தன.
3 ஆண்டுகளுக்கு முன்பு தன் கணவனை இழந்து, நோயுற்ற இந்த ஒரே புதல்வனை எப்படியேனும் காப்பாற்றிவிடவேண்டுமென்ற முயற்சியில், 3 ஆண்டுகள் மருத்துவமனைகளிலேயே காலத்தைக் கழிக்கவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு, விடா முயற்சியோடு புதல்வனுக்கு மருத்துவச் சிகிச்சையை அளித்து வந்த தாய் திருமதி சுமதி (சேலம்)யின் பொறுமையும், தன்னம்பிக்கையும் வேறு எந்த தாய்க்கும் இருந்திருக்காது என்பது அவரோடு பழகிய என் போன்ற நண்பர்களுக்குத்தான் தெரியும்.
திருமதி சுமதியின் துயரம் விரைவில் மறைந்து, அவரது எதிர்காலம் வளமானதாக மலர நமது அனைவரின் பிரார்த்தனைகள் துணை நிற்கட்டும்! சிறுவனின் நோய் தீர பிரார்த்தனை செய்தும், தங்களாலியன்ற நிதியுதவி அளித்து உதவியவர்களுக்கும் சுமதி சார்பில் இதன் மூலம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- கிரிஜா மணாளன்
(செயலாளர், உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம் ( திருச்சி மாவட்டக்கிளை)
Email: girijamanaalanhumour@gmail.com
No comments:
Post a Comment