நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Saturday, May 14, 2011

அதிமுகவுக்கு தனிப் பெரும்பான்மை: முதல்வராகிறார் ஜெயலலிதா!


தமிழகத்தில் 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 

 கடைசிகட்டத்தை எட்டி வரும் நிலையில், அதிமுகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைப்பது உறுதியாகியுள்ளது.

மூன்றாவது முறையாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தமிழகத்தின் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

தனது கூட்டணி கட்சிகளின் உறுதுணையின்றி, தனித்து ஆட்சியமைக்கக் கூடிய அளவில் தனிப் பெரும்பான்மையை பெறுகிறாது, அதிமுக.

வரும் 15-ம் தேதி சென்னை - கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகையில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ளதாகத் தெரிகிறது.



இதனிடையே, முதல்வர் கருணாநிதி தனது முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கருணாநிதி, தனக்கு மக்கள் ஓய்வு கொடுத்து விட்டதாக தெரிவித்தார்.

தமிழகத்தின் 234 தொகுதிகளில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.

பிற்பகல் 4 மணி நிலவரப்படி, அதிமுக கூட்டணியின் மொத்தம் 199 தொகுதிகளில் வெற்றியும் முன்னிலையும் பெற்றிருந்தன. திமுக கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றியும் முன்னிலையும் வகித்திருந்தன.

எதிர்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த்

இந்தத் தேர்தலில் 27 இடங்களை கைப்பற்றவிருப்பதன் மூலம் தேமுதிக எதிர்கட்சியாகிறது. விஜயகாந்த் எதிர்கட்சித் தலைவராகிறார். திமுக 24 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

இந்த வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த விஜயகாந்த், ஏற்கெனவே முடிவு செய்தபடி, ஆட்சியில் பங்கு கேட்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.

பணபலம் தோற்றது: ஜெயலலிதா

வெற்றி மகிழ்ச்சியுடன் போயஸ் தோட்டத்து இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா, "இந்தத் தேர்தலில் பணபலம் தோற்றுவிட்டது. இது, தமிழக மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த மகத்தான வெற்றி.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதும், அதிமுக வாக்குறுதிகளை நிறுவேற்றுவதுமே முன்னுரிமை அளிக்கவுள்ள பணிகள்.

அதேபோல், வீழ்ந்துகிடக்கும் பொருளாதார நிலையை சரி செய்வோம். தமிழகத்தில் நிர்வாகத்தில் உள்ள குப்பைகளை அகற்றுவோம். ஆளுனர் அழைப்புக்கு பிறகு பதவியேற்பது குறித்து முறைப்படி அறிவிப்போம்.

எங்கள் கூட்டணி கட்சிகளின் உறுதுணையாலும் இந்த வெற்றி பெற்றுள்ளோம். எங்களைத் தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன்.

இந்தத் தேர்தலை அமைதியாகவும் நியாயமாகவும் நடத்திய தேர்தல் ஆணையத்துக்கு மீண்டும் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்," என்றார் ஜெயலலிதா. 

ஜெ.-க்கு பிரதமர் வாழ்த்து!

தமிழகத்தில் மகத்தான வெற்றி பெற்றுள்ளதற்காக, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் இன்று வாழ்த்து தெரிவித்தார். 

ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பிய அவர், ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். 

அப்போது, பிரதமர் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதாக பிரதமர் அலுவலக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

அதிமுகவுக்கு எழுச்சி தந்த 'சாதகங்கள்'!

* திமுக குடும்ப அரசியல். 

* தேமுதிகவுடன் கைகோர்த்த காரணத்தால் கிடைத்த வாக்கு வங்கி. 

* பொதுவாகவே ஆளும் அரசு மீது மக்களுக்கு ஏற்படும் இயல்பான அதிருப்தியும் ஏற்மாற்றமும். 

* கவனத்தை வெகுவாக ஈர்த்த தேர்தல் அறிக்கை. 

* தைரியமான பெண்மணி, சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை. 

இப்படியான சாதகங்கள் வலு பெற்றதால், தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது அதிமுக அணி!

திமுக-வை வீழ்த்திய 'பாதகங்கள்'!

* 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். அது குறித்த மக்களின் விழிப்பு உணர்வு. 

* படித்தவர்கள் மத்தியில் கருணாநிதி மீதான வெறுப்பு. 

* குடும்ப ஆதிக்கம். 

* ஈழ விவகாரத்தில் கருணாநிதியின் செயல்பாடு. 

* தமிழ் ஆர்வலர்களின் காங்கிரஸ் வெறுப்பு. 

* ஓயாத மின் வெட்டு. 

* கடுமையான விலைவாசி உயர்வு. 

* தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி. 

இவை போன்ற மக்களை எளிதில் வெறுப்புக்கு ஆளாக்கவல்ல பாதகங்களே திமுக கூட்டணி மண்ணைக் கவ்வுவதற்கான சூழலை ஏற்படுத்திவிட்டது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. 

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் 91 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது.  

சட்டப்பேரவைத் தேர்தலில் முக்கியக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் 84 இடங்களில் நேரடியாக மோதின. திமுக 119 இடங்களிலும், அதிமுக 160 இடங்களிலும் போட்டியிட்டன. 

திமுக அணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 63 இடங்களிலும், பாமக 30 இடங்களிலும் போட்டியிட்டன. 

மேலும், திமுக அணியில் விடுதலைச் சிறுத்தைகள் - 10, கொங்கு நாடு முன்னேற்ற கழகம் - 7, முஸ்லிம் லீக் - 3, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் - 1 மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி - 1 இடம் என களத்தில் இருந்தன.

அதிமுக அணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக 41 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் முறையே 12 மற்றும் 10 இடங்களில் போட்டியிட்டன. 

மேலும், அதிமுக அணியில் மனிதநேய மக்கள் கட்சி - 3, சமத்துவ மக்கள் கட்சி - 2, புதிய தமிழகம் - 2, கொங்கு நாடு இளைஞர் பேரவை - 1, மூவேந்தர் முன்னணி கழகம் - 1, இந்தியக் குடியரசு கட்சி - 1, பார்வர்டு பிளாக் (கதிரவன்) - 1 இடம் என களத்தில் இருந்தன.

Thursday, May 12, 2011

2006 சட்டசபைத் தேர்தல்: அப்போதைய கூட்டணிகள்-வென்ற இடங்கள்!


2006 சட்டசபைத் தேர்தலில் எந்த ஒரு தனிக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இருப்பினும் திமுக கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைத்து அது ஆட்சியமைத்தது. அதிமுக ஆட்சியைப் பறி கொடுத்தது.

திமுக கூட்டணி:

2006 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை இணைந்திருந்தன.

அதிமுக கூட்டணி:

அதிமுக கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய தேசிய லீக் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

தனித்து 232 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக:

2005ல் ஆரம்பிக்கப்பட்ட விஜயகாந்த்தின் தேமுதிக தனித்துப் போட்டியிட்டது. இக்கட்சி 234 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்தது. இருப்பினும் 2 வேட்பாளர்களுக்கு சின்னம் கிடைக்காததால் 232 தொகுதிகளில் மட்டும் அது போட்டியிட்டது.

திமுக கூட்டணி-கட்சிகள் போட்டியிட்ட இடங்கள்:

திமுக கூட்டணியில் திமுக 132 போட்டிகளில் போட்டியிட்டது. காங்கிரஸ் 48, பாமக 31, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 13, இந்திய கம்யூனிஸ்ட் 10 தொகுதிகளில் போட்டியிட்டன.

அதிமுக கூட்டணி-கட்சிகள் போட்டியிட்ட இடங்கள்:

அதிமுக கூட்டணியில் அதிமுக 188, மதிமுக 35, விடுதலைச் சிறுத்தைகள் 9 தொகுதிகளில் போட்டியிட்டன.

திமுக கூட்டணி வென்ற இடங்கள்:

திமுக கூட்டணி மொத்தம் 163 இடங்களில் வெற்றி பெற்றது.

அதில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த இடங்கள்

திமுக - 96
காங்கிரஸ் - 34
பாமக - 18
சிபிஎம் - 9
சிபிஐ - 6

அதிமுக கூட்டணி வென்ற இடங்கள்:

அதிமுக கூட்டணி 69 இடங்களில் வென்றன.

அதிமுக - 61
மதிமுக - 6
விடுதலைச் சிறுத்தைகள் - 2

தேமுதிக - 1

சுயேச்சை - 1

கூட்டணிகள்-கட்சிகளுக்கு கிடைத்த வாக்கு சதவீதம்:

திமுக கூட்டணி - 44.8%
திமுக - 26.5%
காங். - 8.4%
பாமக - 5.7%
சிபிஎம் - 2.7%
சிபிஐ - 1.6%

அதிமுக கூட்டணி - 39.9%
அதிமுக - 32.6%
மதிமுக - 6.0%
விடுதலைச் சிறுத்தைகள் - 1.3%

தேமுதிக - 8.4%

பாஜக - 2.0%

Wednesday, May 11, 2011

ஐஏஎஸ் தேர்வில் நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்தார் சென்னை திவ்யதர்ஷினி


டெல்லி: சிவில் சர்வீஸ் தேர்வுகளில் நாட்டிலேயே முதலாவதாக வந்து சாதனை படைத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் திவ்யதர்ஷினி.

பி.ஏ., பி.எல் படித்துள்ள திவ்யதர்ஷினி, சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பி.எல். படித்தவராவார். இவர் 2010ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின.

நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்திருப்பது குறித்து திவ்யதர்ஷினி பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நல்ல ரேங்க் கிடைக்கும் என்று எனக்கு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் முதல் ரேங்க் கிடைக்கும் என்பதை நான் எதிர்பார்க்கவே இல்லை.

அரசுப் பணியில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த நான் விரும்புகிறேன். ஊழல் போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக செயல்பட நான் ஆர்வமாக உள்ளேன் என்றார்.

2வது ரேங்க்கை ஹைதராபாத்தைச் சேர்ந்த பி.டெக் படித்த ஸ்வேதா மொஹந்தி பெற்றுள்ளார்.

ஆண்களிலும் சென்னையைச் சேர்ந்தவரே முதலிடம்

அதேபோல ஆண்களைப் பொறுத்தவரை முதலிடத்தைப் பிடித்துள்ளார் வருண்குமார். இவரும் சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு ரேங்குகள் தமிழகத்திற்கு

முதல் பத்து இடங்களில் வந்துள்ளவர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது புதிய பெருமையாகும்.

அருண்குமார் 3வது இடம், சங்கரன் - 4வது இடம், அரவிந்த் - 8வது இடம் பிடித்துள்ளனர்.

மொத்தம் 2 லட்சத்து 69 ஆயிரத்து 36 பேர் பிரிலிமினரி தேர்வை எழுதினர். இவர்களில் 12,491 பேர் மெயின் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். அவர்களில் 2589 பேர் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். அவர்களில் 920 பேர் (இவர்களில் 717 பேர் ஆண்கள், 203 பேர் பெண்கள்) வெற்றி பெற்று தற்போது தர வரிசைப்படி ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் மற்றும் பிற சிவில் சர்வீஸ் பணிகளுக்குத் தேர்வாகியுள்ளனர்.

முதல் 25 இடங்களைப் பிடித்துள்ளவர்களில் 20 பேர் ஆண்கள், ஐந்து பேர் பெண்கள். இவர்களில் 15 பேர் என்ஜீனியர்கள், 5 பேர் வர்த்தகம், நிர்வாகவியல், ஹியுமானிடிக்ஸ், அறிவியல், சமூக அறிவியல் பட்டதாரிகள். ஐந்து பேர் மருத்து அறிவியல் படித்தவர்கள்.

டாப் 25 பேரில் எட்டு பேர் முதல் முறையிலேயே இந்த வெற்றியைப் பெற்றுள்ளனர். நான்கு பேர் 2வது முயற்சியிலும், 9 பேர் மூன்றாவது முயற்சியிலும், 3 பேர் நான்கு மற்றும் ஒருவர் ஐந்தாவது முயற்சியிலும் வென்றுள்ளனர்.

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட இணையதளத்தில் காணலாம் - www.upsc.gov.in.

மீண்டும் உடைந்தது பல்சக்கரம்: ஊட்டி மலை ரயில் ரத்து


ஊட்டி: தண்டவாளப் பல் சக்கரம் உடைந்ததால் ஊட்டி மலை ரயில் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஊட்டி மலை ரயில்:

ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்வது மலை ரயில். மேட்டுப்பாளையத்தில் துவங்கி குன்னூர் வழியாக ஊட்டி வரை செல்லும் 


இந்த மலை ரயில் பசுமையான காடுகள், கணவாய்கள் ஆகியவற்றை ஊடறுத்துச் செல்வதால் இதில் பயணிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

அடுத்தடுத்து செயலிழப்பு:

இந்த முறை சீசன் துவங்கியதிலிருந்தே இந்த ரயில் அடிக்கடி நின்று போவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் தடம் புரண்டதால் ஒருவாரகாலமாக தண்டவாளம் சீரமைக்கப்பட்டு நேற்றுத்தான் போக்குவரத்து துவங்கியது.

உடைந்துபோன பல் சக்கரம்:

இந்நிலையில் நேற்றைய பயணத்தின்போது பீனியன் வீல் எனப்படும் தண்டவாளப் பல்சக்கரம் சேதம் அடைந்தது. மலையேற்றத்தின்போது ரயில் தானாகவே பின்வராமல் இருக்க தாங்கிப்பிடிப்பதே பீனியன் வீலின் பணி. ரண்ணிமேடு பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது தண்டவாளம் உடைந்திருப்பதை ரயில் ஓட்டுனர் நசுரூதின் கண்டுபிடித்தார். இதனை அடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.

வருகிறது அதிகாரிகள் குழு:

அடுத்தடுத்து ரயில் நிறுத்தப்படுவதால், சென்னையிலிருந்து ரயில்வே அதிகாரிகள் இன்று குன்னூருக்கு வர இருக்கிறார்கள். இது தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் விலை நாளை நள்ளிரவு முதல் உயர்கிறது?

டெல்லி: கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், நஷ்டத்தைச் சமாளிக்க பெட்ரோல், சீஸல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

பெட்ரோல் லிட்டருக்கு ரூ 3-ம், டீஸல் விலை ரூ 4-ம், கேஸ் விலை ரூ 25 வரையும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. பெட்ரோல் - டீஸல் விலை உயர்வு மட்டும் நாளை நள்ளிரவே அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை உயர்ந்த போதிலும், பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

தமிழ்நாடு, புதுவை, கேரளா உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்ததால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதனால் எண்ணை நிறுவனங்களுக்கு ரூ 1.80 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நேற்று பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்துவது தொடர்பான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நடப்பதாக இருந்தது.

ஆனால் சில மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ள முடியாததால் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இன்று மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 3 வரை உயர்த்த முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

இதேபோல் டீசல், கேஸ் விலை அடுத்த வாரம் முதல் உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. டீசல் லிட்டருக்கு ரூ. 3 முதல் ரூ. 4 வரையும், சமையல் கேஸ் சிலிண்டருக்கு ரூ. 20 முதல் ரூ. 25 வரையும் உயர்த்தப்படுகிறது. இதுபற்றி மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுகிறது.

நாடு வளம் பெறும்: நான்கு துறைகள் சரியாய் இருந்தால்...


இந்த கட்டுரை ஆசிரியர் திரு.என்.முருகன், அவர்கள்  ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி.  துக்ளக்கில் தொடர்ந்து எழுதி வருபவர். இவரது நேர்மையையும் சிறப்பையும் சுட்டிக்காட்ட இது ஒன்றே போதும். இவர் கட்டுரைகள் தேச முன்னேற்றம் , தேச நலம்,  அதிகாரிகள் மற்றும்  தலைவர்களின் நேர்மை குறித்தே சுற்றி சுற்றி வரும். மிகச்சிறந்த தேசபக்தர். பல பொறுப்புகளில் மிக நேர்மையாக பணியாற்றியவர்.மிகச்சிறந்த அனுபவசாலி.தினமலரில் பிரசுரமான இவரது கட்டுரையை வெளியிடுவதில் சகமனிதன் பெருமை கொள்கிறான்.     

 ஆட்சியில் உள்ள அரசு எவ்வளவு திட்டங்களைத் தீட்டினாலும், அதை செயல்படுத்தி, மக்கள் பலன் பெறுவது அதிகாரிகள் கையிலும், அவர்களின் நிர்வாகத் திறனிலும் தான் உள்ளது. ஆட்சியாளர்களுக்கும், அதிகாரி களுக்கும் இடையே இணக்கமான சூழல் தொடர்ந்தால் மட்டுமே, மாநிலத்தின் வளர்ச்சி உறுதிப்படுத்தப்படும்.

அந்த வகையில், தமிழகத்தில் அரசு திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடையும் வகையில், நிர்வாகத்தை சீர் செய்ய, புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, என்.முருகன் கூறும் ஆலோசனை:

கடந்த, 1989ல், மத்திய தொழில் துறை இணை அமைச்சராக இருந்த அருணாச்சலத்திடம், தனிச் செயலராக இருந்தேன். அப்போது, மேற்கு வங்கத்திலிருந்து வந்த, ஜி.வெங்கட்ரமணன் என்ற, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி, தொழில் துறை இணைச் செயலராக இருந்தார்.அவர் என்னிடம் கூறும் போது, "மேற்கு வங்கத்தில் புதிதாக ஏதேனும் ஒரு திட்டத்தை நடைமுறைபடுத்தும் போது, அதற்கு நிதி ஒதுக்குவது, எப்படி நடைமுறைபடுத்த வேண்டும் என்ற செயல்பாடுகளை தொகுத்து, ஒரு அரசாணை பிறப்பிக்கப்படும். அப்படி அரசாணைக்கான வரைவை எழுதும் முன், இதே பொருளில், தமிழக அரசு வெளியிட்ட ஆணையைப் பெற்று, அதில், பெயர்கள், பணம் தொடர்பான விவரங்களை மட்டும் மாற்றி வெளியிடுவோம். இதனால், தமிழக அதிகாரி என்பதையே பெருமையாக கருதுவேன்' என்றார்.

நான் டில்லியில் பணிபுரிந்த போது, இதே பாணியில் வேறு மாநில அதிகாரிகளும் கூறியுள்ளனர். இப்படி, நாட்டுக்கு வழிகாட்டியாக, முந்தைய காலங்களில் தமிழக அரசின் நிர்வாகம் இருந்தது; இப்போது, காலம் மாறிவிட்டது.சமீபத்தில் டில்லி சென்றிருந்த போது, தமிழக நிர்வாகம் குறித்து, மத்திய அரசின் உயரதிகாரிகள் பலர் மிகுந்த வியப்பும், வேதனையும் தெரிவித்தனர். "தமிழக அரசில் முதல்வரில் இருந்து, அனைத்து அமைச்சர்களும், செயலர்களும், தங்களுக்கு கீழே பணிபுரியும் செயலர்களுக்கும், தனிச் செயலர்களுக்கும் ஓய்வு அளித்து வீட்டுக்கு அனுப்பாமல், மீண்டும், மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்கி பணியமர்த்திக் கொள்கின்றனராமே... உண்மையா?' என கேட்டனர். "ஆம்... மிகப் பெரிய அதிகார துஷ்பிரயோகம்' என, பதில் கூறினேன்.

துணை கலெக்டர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவர், கடந்த ஒன்பது ஆண்டுகளாக அரசு பதவியில் தொடர்கிறார். இவர் மட்டுமல்ல, பியூன்கள், லிப்ட் ஆபரேட்டர்கள் கூட பதவி நீட்டிப்பு பெறுகின்றனர்.இதற்கெல்லாம் காரணம், அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் தாங்கள் செய்யும் ஊழல்களுக்கும், விதிமீறல்களுக்கும், துணை வருபவர்களுக்கு, பதவி நீட்டிப்பு வழங்குகின்றனர் என, பதில் சொல்லவே கூச்சமாக இருக்கிறது.அடுத்து அரசு ஊழியர்களை ஓட்டு வங்கிகளாக கருதி, அவர்கள் வேலை செய்யாவிட்டாலும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசு, முதலில் கவனிக்க வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.வேறு எந்த துறைகள் சரியாக செயல்படாவிட்டாலும் வருவாய்த்துறை, காவல்துறை, மருத்துவத்துறை, கல்வித்துறை ஒழுங்காக இருந்தாலே, மக்கள் நல்வாழ்வு பாதிக்காமல் மாநிலத்தின் முன்னேற்றம் தடையின்றி தொடரும்.மருத்துவர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும். தரமான மருந்துகளை, சரியான விலைக்கு வாங்கி நோயாளிகளுக்கு தர வேண்டும். போலீசார் தங்களுக்கு இடப்பட்ட பணிகளை, குறித்த காலத்தில் முடிக்கின்றனரா என்பதை, தலைமை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அரசுப் பள்ளி, கல்லூரிகளில், ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வந்து, பாடம் கற்பிக்க வேண்டும். இவற்றை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை, யுத்த வேகத்தில் புதிய அரசு நிறைவேற்ற வேண்டும்.

தனியார் கல்லூரிகள், தகுதி வாய்ந்த ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தி யுள்ளனவா, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றியுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற அலங்கார திட்டத்தை ரத்து செய்து, அந்த தொகையை மருத்துவமனைகளை சீர் செய்வதற்கும், விரிவாக்கம் செய்வதற்கும் பயன்படுத்த வேண்டும்.மாநில நிர்வாகத்தின் உயிர் மூச்சு, மாவட்ட கலெக்டர்களின் தலைமையிலான வருவாய் துறை. இதை வலுப்படுத்த, மாவட்ட கலெக்டர்களின் அதிகாரம் நிலை நிறுத்தப்பட வேண்டும். மாவட்ட அமைச்சர்கள் பின்னால், மாவட்ட கலெக்டர்களும், எஸ்.பி.,க்களும் செல்வதை தவிர்க்க வேண்டும். டி.ஆர்.ஓ.,க்கள், துணை கலெக்டர்கள், தாசில்தார்கள், ஆர்.ஐ.,க்கள், வி.ஏ.ஓ.,க்கள் தங்களுக்கு இடப்பட்ட வேலைகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும்.

இலவச திட்டங்களுக்கும், முதல்வர், துணை முதல்வர் பங்கேற்கும் விழாக்களுக்கும், இத்தகைய அதிகாரிகள் தங்கள் முழு நேரத்தையும் செலவழித்து, தங்கள் கடமைகளை நிறுத்தியதால், கடந்த நான்காண்டுகளாக நிர்வாகம் சீர்கெட்டுப் போனது. இதை சரிசெய்தாலே புதிய அரசு, தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பீடு நடை போட, முதல் அடியை எடுத்து வைத்ததாகும்.அரசு நிர்வாகத்தில் ஒவ்வொரு பணியை செய்வதற்கும் விதிகள் உள்ளன. அதன்படி செய்தால், தவறுகள் வராது. இதனால், வெளிப்படைத் தன்மை தேவை என்ற கோரிக்கைக்கே தேவையிருக்காது.பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை இவற்றில் ஒப்பந்தம் பெறுவதில் லஞ்சம் பல ஆண்டுகளாக தொடர்கிறது. தகுதியில்லாத ஒருவருக்கு இது போன்ற கான்ட்ராக்ட்களை விதிகளை மீறி வழங்கி, அதற்காக ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை, அதிகாரிகளே பெற்று விடுகின்றனர். இந்த ஊழலை ஒழிக்காவிட்டால் அரசு நிர்வாகம், நாட்டு நலன் சீரழிந்து விடும்.

என்.முருகன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி

Source: Dinamalar

கடைசியில் குப்பைக்கே வந்து விட்டது தமிழக அரசு வழங்கிய இலவச கலர் "டிவி'

 தமிழக அரசால் வழங்கப்பட்ட இலவச கலர் "டிவி' குப்பை மேட்டிற்கு வந்து விட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.கலர் "டிவி' என்பது துவக்க காலத்தில் சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது. பின், தனிநபர் வருமானம் உயர்ந்ததால், சாதாரண மக்கள் கூட கலர் "டிவி'யை வாங்கி மகிழ்ந்தனர். இந்நிலையில், கடந்த தமிழக சட்டசபை தேர்தலில், ஆட்சியை பிடிப்பதற்காக, மக்களிடையே பல இலவச திட்டங்களை தி.மு.க., அறிவித்தது. அவற்றில் முக்கியமான திட்டம் இலவச கலர் "டிவி!'ஆட்சிக்கு வந்த பிறகு, பல கட்டங்களாக இலவச "டிவி'க்களை மாவட்டம்தோறும் வழங்கியது. "டிவி' வழங்கும் இடத்திலேயே வாங்குபவர்கள் விற்பனை செய்வதும் அரங்கேறி வந்தது. இந்நிலையில், இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட பல "டிவி'க்கள் கொடுத்த சில மாதங்களிலேயே திடீர் திடீரென வெடித்த சம்பவங்களும் நடந்தன.

விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க., தொண்டரின் "டிவி' அடிக்கடி பழுதானதால், 500, 1,000 ரூபாய் என தண்டச் செலவு செய்து வெறுத்து போன அவர், அரசு கலர் "டிவி'யை நடுரோட்டில் போட்டு உடைத்த சம்பவமும் நடந்தது.இதற்கு எல்லாம் உச்சக்கட்டமாக, தமிழக அரசால் சில மாதங்களுக்கு முன் வழங்கப்பட்ட (வீணான) "டிவி'யை, புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியில் உள்ள கிராமத்தில் இருந்து, ஆலங்குப்பம் காயிலான் கடைக்கு எடைக்கு போட ஒருவர் கொண்டு வந்தார். இதை கடைக்காரர் வாங்க மறுத்ததால், ஆத்திரமடைந்த அந்த நபர், கடைக்கு எதிரில் (சாலையோரத்தில்) சாதாரண குப்பையை வீசுவது போல், தமிழக அரசு வழங்கிய இலவச "டிவி'யை வீசி சென்று விட்டார். இலவச "டிவி' திட்டத்துக்கு செலவழித்த பணத்தை, தமிழக அரசு ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பயன்படுத்தி இருந்தால், தமிழகம் வளர்ச்சி பாதையை எட்டி இருக்கும்.

Tuesday, May 10, 2011

வாக்கு எண்ணிக்கை: மே 13-ம் தேதி மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு

வரும் 13-ம் தேதி தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு வாக்கு எண்ணப்படும் அன்று அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,


தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 13-ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. மின்னணு  வாக்குப்பதிவு எந்திரங்கள் 91 மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் வரும் 13-ம் தேதி 91 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான கடைகள் அதனைச் சார்ந்த பார்களை கண்டிப்பாக மூட வேண்டும்.


அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விந்தன் நினைவு சிறுகதை போட்டி

திருச்சி: மறைந்த எழுத்தாளர் விந்தன் நினைவாக சிறுகதைப் போட்டி ஒன்றை தி்ருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் அறிவி்த்துள்ளது.

இது குறித்து தி்ருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

மறைந்த எழுத்தாளர் விந்தன் நினைவாக சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்த தி்ருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகள் அரசியல் தவிர்த்து, சமூக சிந்தனைகள் நிறைந்ததாக இருக்க வேண்டும்.

சிறுகதைகள்
ஏ 4 தாளில் 6 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அனுப்பப்படும்
கதைகள் இதுவரை எந்த இதழிலும் வெளிவராதவையாக இருக்க வேண்டும்.

தேர்வு
செய்யப்படும் சிறுகதைக்கு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக
ரூ. 5 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 3 ஆயிரமும் வழங்கப்படும்.

சிறுகதைகள் அனுப்ப வேண்டிய முகவரி:

வை. ஜஹவர் ஆறுமுகம்,
தலைவர், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம்,
எண் 2 9, கிருஷ்ணமூர்த்தி நகர்,
திருச்சி - 21.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, May 5, 2011

அக்னிநக்ஷத்திரம் - பாகம் இரண்டு

அக்னிநக்ஷத்திர காலங்களில் செய்யத் தகுந்தவை, செய்யக்கூடாதவை:

அக்னிநக்ஷத்திர காலங்களில் கிணறு வெட்டுதல், கோவில், வீடு நாள் செய்தல், தோட்டம் அமைத்தல், கிரகங்களை கட்டுதல், கொடி மரம் நடுதல், வீட்டிற்கு வாசற்கால் அமைத்தல் போன்றவை செய்தல் ஆகாது.

திருமணம் தொடர்பான விசேடங்கள், மேற்சொன்னவை தவிர ஏனைய விசேடங்கள் அனைத்தும் செய்யலாம்.

கோடை வெப்பமும் மின்வெட்டும்


தமிழகம் முழுவதும் கத்திரி வெயில் மண்டையைப் பிளக்கிறது. அதேசமயம், சரமாரியான மின்வெட்டும் கூடவே சதி செய்வதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வீட்டிலும் இருக்க முடியாமல், வெளியிலும் போக முடியாமல், எந்த வேலையையும் செய்ய முடியாமல் பெரும் கஷ்டத்தில் மாட்டித் தவிக்கின்றனர் மக்கள்.




வரலாறு காணாத அளவுக்கு தமிழகத்தை மின்வெட்டு ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அதிகாலையிலேயே எழுந்து அரக்கப் பரக்க சட்னி, மசாலா போன்றவற்றை வேகமாக அரைக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். காரணம், எப்போது கரண்ட் போகும், எப்போது வரும் என்று தெரியாத அவல நிலை.



இதில் எந்தவிதமான பொய்யும் இல்லை. இந்த நிமிடத்தில் தமிழகத்தில் எந்த மூலைக்குப் போனாலம் அங்கு ஏதாவது ஒரு பகுதியில் கரண்ட் இல்லாமல் இருப்பதைக் காணலாம்.



தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் அதன் புறநகர்களைத் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளிலும் குறைந்தது ஒரு நாளைக்கு 5 மணி நேரம் வரை மின்சாரம் தடைபடுகிறது. அதாவது அதிகாரப்பூர்வமாக 2 அல்லது 3 மணி நேரம் கரண்ட்டைப் பிடுங்கி விடுகிறார்கள். இதுபோக அவ்வப்போது இரவு, பகல் பாரபட்சம் பாராமல் கரண்ட்டை கட் செய்து மக்களை கடுப்பேற்றுகிறார்கள் மின்வாரிய அதிகாரிகள்.



இப்போது சென்னையிலும் மின்சார வெட்டு அமல்பபடுத்தப்படுகிறது. ஒரு மணி நேரம் மின்வெட்டு என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் பெரும்பாலான பகுதிகளில் அதை விட கூடுதலாகவே மின்சாரம் ரத்தாகிறது.



இதை விட கொடுமையாக மின் பராமரிப்பு என்ற பெயரில் ஒரு நாளைக்கு குறைந்தது 50 அல்லது 60 பகுதிகளில் மின்சாரத்தை நிறுத்தி விடுகின்றனர். முன்பெல்லாம் வார இறுதி நாட்களில்தான் இந்த மாதப் பராமரிப்பு நடைபெறுவது வழக்கம். அதுவும் கூட குறைந்த பகுதிகளில்தான் நடைபெறும்.



ஆனால் தற்போது இந்த மின் பராமரிப்பு தினசரி நடைபெறுகிறது. இது போக லோ வோல்டேஜ் பிரச்சினையும் தலைவிரித்தாடுகிறது.



இதனால் கம்ப்யூட்டர்கள், டிவி, பிரிட்ஜ் என எதையும் பத்திரப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. பல இடங்களில் தொடர் மின்வெட்டு மற்றும் லோ வோல்டேஜ் பிரச்சினை காரணமாக பிரிட்ஜ், டிவி, மிக்ஸி உள்ளிட்டவை பழுதுபடுவது சர்வ சாதாரணமாகி விட்டது.



இப்படி மின்சாரம் ஒருபக்கம் மக்கர் செய்தால், மறுபக்கம் வெயில் மண்டையைப் பிளக்க ஆரம்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் கத்திரி வெயில் தற்போது தொடங்கி விட்டது. இதனால் வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது.



பல நகரங்களில் 100 டிகிரி அளவுக்கு வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்திலேயே அதிக அளவாக சென்னையிலும், வேலூரிலும்தான் வெயில் உக்கிரமாக உள்ளது.



இந்த இரு நகரங்களிலும் 105 டிகிரிக்கு வெயில் கோரமாக உள்ளது. இதேபோல நெல்லை, பாளையங்கோட்டை, திருச்சி, கடலூர் ஆகிய நகரங்களிலும் வெயில் 100 டிகிரியைத் தாண்டி விட்டது. மதுரையில் சற்று வெயில் குறைவாக உள்ளது.



கொடும் வெயில், கடும் மின் தடை என்று தமிழக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று சொன்னாலும் கூட அது மிகையில்லை.


மின்சார ஹைக்கூ கவிதை:


தலைப்பு: மின்சாரம்
மின்சாரத்தைப் பற்றி
மண்ணென்ணை விளக்கில் படித்தான் 
மாணவன்....

தட்ஸ்தமிழ் இணையத்திற்கு ஒரு கோரிக்கை

தட்ஸ்தமிழ் இணையத்தில்,

இந்த செய்தி இப்போது தலைப்புச் செய்தி(05-05-2011, வியாழன், மதியம் 12.55)

”தேரத்ல் பிரசாரத்தின்போது அவதூறாகப் பேசியதாக கூறி ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் மீது அதிமுகவும், மு.க.ஸ்டாலின் மீது திமுகவும் புகார் கொடுத்தன.”



அதிமுக ஜெயலலிதா மீதும், ஸ்டாலின் மீது திமுகவும் புகார் கொடுத்ததாக செய்தி வெளியிட்டுள்ளீர்களே, இதுதான் பத்திரிகை தர்மமா?

Copy & Paste வேலையை கூட சரியாக செய்வதில்லையே, ஏன்?

அமுதப்ரியன்


கருத்து கணிப்புகள் சரியாகுமா?

கட்டுரையாளர் சோலை "முதுபெரும் எழுத்தாளர்களில் ஒருவர்; என் மனம் கவர்ந்த கருத்தாளர்களில் ஒருவர் சோலை' என, கருணாநிதியால் வர்ணிக்கப்படுபவர். "நக்கீரன்' இதழில் இவர் எழுதும் தொடர் கட்டுரையின் மறுபதிப்பு இது.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஜெயலலிதா தான் என்று பிரகாஷ்காரத், ஏ.பி.பரதன் போன்ற இடதுசாரி தலைவர்கள் கட்டியம் கூறினர். "மே 15ல், ஜெயலலிதா முதல்வராக முடிசூடுகிறார்' என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா.பாண்டியன் ஈரோட்டில் பிரகடனம் செய்தார். ஏன்? அடுத்த முதல்வர் ஜெ., தான் என்று கடந்த ஓராண்டு காலமாகவே, ம.தி.மு.க., தலைவர் வைகோவும் முழங்கி வந்தார்.

இத்தகைய அறிவிப்புகள் எல்லாம், அ.தி.மு.க.,வினரை உற்சாகம் கொள்ளச் செய்தன. காங்கிரஸ் கட்சிக்கு, 63 தொகுதிகள் என்று தி.மு.க., அறிவித்தது. காங்கிரஸ் தொண்டர்களை விட, அ.தி.மு.க.,வினர் தான் அதிகம் மகிழ்ந்தனர். பா.ம.க.,விற்கு 30 இடங்கள் என்று செய்தி வந்தது; அந்தக் கட்சி தொண்டர்களை விட, அ.தி.மு.க., தொண்டர்கள் தான் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தாங்கள் சந்திக்க போகும் இந்த எதிர் முகாம்கள் பலவீனமானவை என்பது அவர்கள் கணிப்பு. அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., அங்கம் பெறுவது உறுதி என்ற தகவல் வந்த போது, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட்டதாகவே ஆர்ப்பரித்தனர். இந்த நிலையில் தான் கருத்து கணிப்புகள் வெளியிடப்படுகின்றன. அவைகள் நியாயமான கணிப்புகளும் அல்ல; நேர்மையான தீர்ப்புகளும் அல்ல.

கடந்த 1971ல், சட்டசபை, லோக்சபா தேர்தலில் போது கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. "ராஜாஜியும், காமராஜரும் அமைத்த கூட்டணி அமோக வெற்றி பெறும். தி.மு.க., கூட்டணி தோல்வியுறும்' என, கணிப்புக்களும், விமர்சனங்களும் வாரி இறைக்கப்பட்டன. ஆனால், மக்கள் எப்படி தீர்ப்பளித்தனர்? தி.மு.க., தமிழகத்தில் அரியணை ஏறியது; மத்தியில் இந்திரா பிரதமரானார். கடந்த லோக்சபா தேர்தலின் போது, டில்லி ஆங்கில தொலைக்காட்சிகளும் ஆங்கில வார ஏடுகளும் எப்படி கணித்தன? அகில இந்திய அளவில், பா.ஜ., ஆட்சி என்றனர். இல்லையேல் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத தொங்கு பார்லிமென்ட் என்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சி முன்பை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி பீடம் ஏறியது. தமிழகத்தில், தி.மு.க., கூட்டணி ஒன்பதே இடங்களில் தான் வெற்றி பெறும். அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்தன. தேர்தல் தீர்ப்பு எப்படி அமைந்தது என்பதை அறிவோம். அவர்கள் தங்கள் ஆசைகளை செய்திகளாக்குகின்றனர். தங்கள் விருப்பங்களை கருத்துக் கணிப்புக்களாக கதை புனைகின்றனர்.

பிரபல ஆங்கில வார ஏடும், அதன் தொலைக்காட்சியும் கருத்துக் கணிப்புக்களை வெளியிட்டிருக்கின்றன. அ.தி.மு.க., கூட்டணிக்கு, 50 சதவீத ஓட்டுகளும், 164 தொகுதிகளும் கிடைக்கும். தி.மு.க., கூட்டணிக்கு, 45 சதவீத ஓட்டுகளும், 68 தொகுதிகளும் கிடைக்கும் என்று தெரிவித்திருக்கின்றன. அ.தி.மு.க., கூட்டணியில் குழப்பங்கள் உருவாவதற்கு முன் இந்த கருத்துக் கணிப்புகள் எடுக்கப்பட்டன. இவர்கள் எல்லாம் மக்களிடம் எத்தகைய கேள்விகளை எழுப்பினர்? விலைவாசி உயர்வு, குடும்ப ஆட்சி இந்த பிரச்னைகளில் உங்களை மிகவும் பாதித்தது எது என்ற அளவில் தான் கேள்விகள் கேட்கப்பட்டன. கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றபட்டிருக்கின்றவா? அதன் சாதனைகளில் தங்களைக் கவர்ந்தது எது? அந்தச் சாதனைகள் தொடர வேண்டுமா என்ற அளவில் எந்தக் கருத்துக் கணிப்பாளரும் மக்களிடம் கேள்விகள் எழுப்பவில்லை. மக்கள் எப்படி பதிலளிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினரோ, அதற்கு ஏற்ப கேள்விகளை எழுப்பினர்.

இந்தச் சூழலில் நாம் ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறோம். தமிழக சட்டசபை தொகுதிகளில், 79 தொகுதிகள் நகர்புறத் தொகுதிகள், 164 தொகுதிகள் கிராமப்புறத் தொகுதிகள். தமிழக அரசின் நலத்திட்டங்கள் எட்டாத கிராமங்களே இல்லை. பயன் பெறாத குடும்பங்களே இல்லை. எனவே, எந்த அளவிற்குக் கிராம மக்கள் ஓட்டுச் சாவடிகளுக்கு வருகின்றனரோ, அந்த அளவிற்கு தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பு அமையும். காங்கிரஸ் - பா.ம.க., - சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளை, தி.மு.க., விட்டுக் கொடுத்திருக்கிறது. அவைகளில், 70 தொகுதிகளையாவது கைப்பற்ற முடியும் என, அ.தி.மு.க., கணக்கிட்டு சொல்கிறது. இந்த கணக்கின் விடை, 13ம் தேதி தெரிந்து விடும்.

கட்டுரையாளர் சோலை, பிரபல அரசியல் விமர்சகர். 

Source: Dinamalar

Tuesday, May 3, 2011

அக்னி நட்சத்திரம் - பாகம் ஒன்று


கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் மே மாதம் 4 – ம் தேதி தொடங்கி 29 - ம் தேதி வரை நீடிக்கவுள்ளது.

அக்னி நட்சத்திரம் 21 நாட்கள் வரை காணப்படும் என்பதால் அந்த நாட்களில் வெப்பத்தினால் ஏற்படும் நோய் தாக்காத வகையில் குளிர்ச்சியான பொருட்களை உண்ணவேண்டும். இதில் முதல் 7 நாட்கள் வெப்பத்தின் அளவு மிதமாகவும் பின் 7 நாட்கள் கடுமையாகவும், கடைசி 7 நாட்கள் உஷ்ணம் தணிந்தும் காணப்படும்.



Monday, May 2, 2011

கடவுளைக் கண்டவர்!!


கடவுளைக் காண முடியுமா? கண்டவர்கள் யாரேனும் உள்ளாரா? – இது பலருக்குத் தோன்றும் கேள்வி. அக்காலத்தில் முனிவர்கள் கடும் தவம் செய்து கடவுளைக் கண்டதாக நாம் புராணங்களில் படித்திருக்கிறோம். கடவுளின் குரல் “அசரீரி”யாக ஒலித்து பல விஷயங்களைத் தெரிவித்ததாகவும் புராணங்கள் கூறியிருக்கின்றன. ஆனால், இவையெல்லாம் முழுக்க முழுக்கக் கற்பனை; கடவுள் என்ற ஒருவரே இல்லை – என்ற குரலும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.
 அது சரி, உண்மையிலேயே கடவுளைக் காண முடியுமா, அப்படிக் கண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டால், பதில், ஆம். இருக்கிறார்கள் என்பதுதான். கடவுளைக் கண்டது மட்டுமல்ல; அவ்வாறு கண்டதை அவர்கள் பதிவு செய்தும் வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் இது.
 Colonel Lionel Blaze (கலோனெல் லையோனெல் ப்ளேஸ்) என்பவர் 1795 – 1799 காலகட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்தார். அவர் ஒரு ஆங்கிலேயே அதிகாரி. இந்துக்கள் என்றாலே முட்டாள்கள், படிக்காதவர்கள் என்பது அவர் எண்ணம். இந்துக்கள் சரியான காட்டுமிராண்டிகள், மூடர்கள், ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்கள் என்று இந்தியர்களைப் பற்றி மிகவும் இளக்காரமாக அவர், தனது சக அதிகாரிகளிடம் கூறிக் கொண்டிருப்பார். அது மட்டுமல்ல; சிலையை வணங்கும் இந்துக்கள் பைத்தியக்காரர்கள் என்பதும் அவர் எண்ணம்.
ஒருநாள்… அவரது ஆட்சிக்குட்பட்ட மதுராந்தகம் பகுதியில் பெரு மழை ஏற்பட்டது. மிகப் பெரிய வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள ஏரி உடைந்து விடும் சூழ்நிலை வந்தது. அவ்வாறு உடைந்தால் அந்த ஊரும் சுற்றி உள்ள சின்னச் சின்ன கிராமங்களும் வெள்ளத்தால் அழிந்து விடும். அதனால் அந்த ஊர்ப் பொதுமக்கள் அவரைச் சந்தித்து ஏதாவது செய்யும் படி வேண்டிக் கொண்டனர்.
 அந்த அதிகாரி உடனே மக்களிடம், ”நீங்கள் கோயில் கட்டி வணங்குகிறீர்களே! ஒரு தெய்வம். அந்த தெய்வம் இந்த ஏரியின் கரையை உடைபடாமல் காக்க வேண்டியதுதானே?” என்று கேட்டார்.
 உடனே அங்குள்ள பெரியவர் ஒருவர், “ஐயா, அதிலென்ன சந்தேகம்? நாங்கள் எப்போதும் வணங்கும் ஸ்ரீராமர் எங்களைக் கைவிட மாட்டார். நிச்சயம் எங்களையும், இந்த ஊரையும், ஏன் உங்களையும் கூட எல்லா துன்பங்களிலிருந்தும் காப்பார்” என்றார் நம்பிக்கையுடன்.
 ”ம், அதையும் தான் பார்ப்போமே” என்று சொல்லி விட்டு தனது இருப்பிடத்திற்குச் சென்று விட்டார் அந்த அதிகாரி. மக்களும் ஸ்ரீ ராம பிரானை நோக்கிப் பிரார்த்தனை செய்தவாறே கலைந்து சென்றனர்.

நள்ளிரவு நேரம். மழை இன்னும் தீவிரமானது. நிச்சயம் ஏரி உடைந்து இருக்கும் என்று நினைத்தார் அதிகாரி. சரி, நிலைமை என்னவென்று பார்த்து, மேலதிகாரிக்குத் தகவல் கொடுப்போம் என்று நினைத்து, தனி ஆளாக, கையில் ஒரு குடையுடன் ஏரியை நோக்கிச் சென்றார்.
 
 வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. ” இந்த மழைக்கு நிச்சயம்  இந்நேரம் ஏரி தூள் தூளாகி இருக்கும்” என்று நினைத்த அதிகாரி, மெல்ல சிரமப்பட்டு கரை மீது ஏறி நின்று பார்த்தார். கரு வானம் சூழ்ந்திருந்ததால் அந்த இருட்டில் அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. சற்று நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு மின்னல் வெட்டியது. பளீரென்ற அந்த மின்னல் வெளிச்சத்தில் அதிகாரி அந்த அற்புதக் காட்சியைக்கண்டார்.



ஏரியின் கரை மீது உயரமான இரண்டு வாலிபர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் முகம் அந்த மின்னல் ஒளியில் மிக அழகாக ஒளிவீசிக் கொண்டிருந்தது. இருவர் கைகளிலும் வில், அம்பு வைத்திருந்தார்கள். ஏரியை உற்று நோக்கியவாறே, எதிரும் புதிருமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். ஒரு கணம், ஒரே கணம் தான் அந்தக் காட்சியைக் கண்டார். அடுத்த கணம் அவர்கள் மறைந்து விட்டார்கள்.
 அவ்வளவுதான். அந்த அதிகாரியின் உடல் நடுங்கியது. உள்ளம் கலங்கியது. இந்துக்கள் மடையர்கள் இல்லை; அவர்கள் தெய்வமும் வெறும் கல் இல்லை என்று உணர்ந்து கொண்டார். அப்படியே கீழே விழுந்து மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்தார்.
 மறுநாள் பொழுது புலர்ந்தது. வெள்ளம் வடிந்திருந்தது. பெருமழை பெய்த அறிகுறிகள் ஏதும் இல்லாமல் வழக்கம் போல் ஏரி அமைதியாக இருந்தது. ஏரிக்குச் சென்று அதைப் பார்த்துச் சிலிர்த்த அந்த அதிகாரி, தான் கடவுளைக் கண்ட சம்பவத்தை மக்களுக்குச் சொன்னதுடன் அன்று முதல் ஸ்ரீ ராமபிரானின் பக்தராகவும் ஆனார். ஸ்ரீ தாயார் சன்னதியைக் கட்டிக் கொடுத்ததுடன், பல திருப்பணிகளை அந்த ஆலயத்திற்குச் செய்தார். நடந்த சம்பவத்தை அந்த ஆலயக் கல்வேட்டிலும் பதிப்பித்தார். – “இந்த தர்மம் கும்பினி ஜாகிர் கலெக்டர் லியோனெல் ப்ளேஸ் துரை அவர்களது” என்ற வாசகத்தை இன்றும் நாம் அந்தக் கல்வெட்டில் பார்க்கலாம்.



நம்பிக்கை கொண்டவர்களுக்கு மட்டுமல்ல; சில சமயம் அவநம்பிக்கை கொண்டவர்களுக்கும் அருள் புரிந்து தனது அடியவர்களாக ஆக்கிக் கொள்வதுதான் அந்த ஆண்டவனின் லீலை.


 நன்றி: வாழ்வின் உண்மையான உண்மையைத் தேடி ஓர் பயணம்